திண்டுக்கல் அருகே சிலுவத்தூரைச் சேர்ந்தவர் ஆண்டி (20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. அந்தச் சிறுமி ஏழாம் வகுப்புதான் படித்துவருகிறார். இது குறித்து தகவலறிந்ததும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் பெற்றோர்களை குழந்தைகள் நல அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்திச் சென்றனர்.
இதேபோல், வத்தலக்குண்டு அருகே உள்ள தேவரப்பன்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து என்பவருக்கும், பட்டிவீரன்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவரும் 15 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் விரைந்து சென்று அத்திருமணத்தை தடுத்து நிறுத்தினர். குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என பெற்றோர்களை எச்சரித்து குழந்தைகள் நல அலுவலகத்திற்கு வந்து ஆஜராகவும்படி கூறினர்.
இதையடுத்து பித்தளைப்பட்டி அருகே உள்ள குட்டியபட்டி கிராமத்தில் 17 வயது சிறுமிக்கு 38 வயதுடையவருடன் நடைபெறவிருந்த திருமணத்தை சமூகநல துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது குறித்து மாவட்ட சமூகநல துறை அலுவலர் முத்துமீனாள் கூறுகையில், ”17 வயதான இச்சிறுமி வேடசந்தூரில் இயங்கிவரும் தனியார் மில்லில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த சிறுமிக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாயில்லாத சிறுமிக்கு தந்தையின் கட்டாயத்தால் திருமணம் நிச்சியக்கப்பட்டது. இது குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்ததும் உடனடியாக திருமணத்தை நிறுத்தி சிறுமி மீட்கப்பட்டார்” என்று தெரிவித்தார். ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று குழந்தை திருமணம் நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'தனக்கு திருமணம் வேண்டாம்' - 15 வயது சிறுமி முதலமைச்சரிடம் மனு!