தமிழர்களின் கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து, நாடகம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளில் ஒன்றாவே கலந்துவிட்ட தோல்பாவைக் கூத்தின் பூர்வீகம் மகாராஷ்டிரா மாநிலம் ஆகும்.
பாவை என்றால் அழகான பொம்மை என்று பொருள். ஆட்டுத் தோலை பதப்படுத்தி செய்யப்பட்ட பாவைகளைக் கொண்டு உயிருள்ள கதாபாத்திரங்களைப் போலவே அசைத்து நடத்தப்படும் நாடகம் என்பதால் இதற்கு 'தோல் பாவைக் கூத்து' எனப் பெயர் வந்தது.
திரைக்குப் பின்னால் விளக்குகளை எரியச்செய்து தோல்பாவைகளின் நிழல்கள் திரையில் தோன்றுமாறு அசைத்து கதை சொல்லும் இக்கலை, தஞ்சை மன்னர் சரபோஜி காலத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது. மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு சமூகத்தினர் இக்கலையை நிகழ்த்தி வந்தனர்.
பிற்காலத்தில், பிழைப்பு தேடி இக்கலைஞர்கள் தமிழ்நாடு முழுவதும் இடம்பெயர்ந்தார்கள். தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளே அழிவின் விளிம்பில் உள்ள இக்காலத்தில், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் முந்தைய தலைமுறை மனிதர்களால் அபூர்வமாக இக்கலை நிகழ்த்தப்படுகிறது.
அந்த வகையில் வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தாண்டி, அழிவின் விளிம்பில் உள்ள இக்கலைக்கு தன்னால் இயன்ற அளவு உயிர் கொடுத்து வருகிறார் திண்டுக்கல்லை அடுத்த காற்றோடு கிராமத்தில் வசிக்கும் முத்துலட்சுமண ராவ். திரைப்படங்கள் தோன்றாத காலத்தில் மக்களை மகிழ்விக்க மட்டுமின்றி இதிகாசங்களையும் இக்கலை வழியாகக் கொண்டு சேர்த்ததாகக் கூறும் லட்சுமண ராவ், தோற்பாவைக் கூத்தை அடிப்படையாகக் கொண்டுதான் பேசும் படங்கள் உருவானதாகப் பெருமிதம் தெரிவிக்கிறார்.
காலமாற்றத்துக்கு ஏற்ப, நீர் சிக்கனம், மழை நீர் சேமிப்பின் அவசியம், வனங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு நாடகங்களை தற்போது நிகழ்த்தி வருகிறார். தசாவதாரம் படத்தில் 'முகுந்தா முகுந்தா' என்ற பாடலில் வரும் தோல்பாவைக் கூத்தை நடத்தியவர் இந்த முத்துலட்சுமண ராவ். அதேபோல், ஜோக்கர் படத்தில் வரும் தோல்பாவைக் கூத்தும் இவரால் நடத்தப்பட்டதே. இவ்விரு படங்களால் இளைய தலைமுறை மக்களிடையே தோல்பாவைக்கூத்து பிரபலம் அடைந்தாலும், இதைக் காண்பதற்கான ஆர்வம் அவர்களுக்கு இல்லை என்று வேதனை தெரிவிக்கிறார் இக்கலைஞர்.
அரசு நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் தோற்பாவைக் கூத்து மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் இவரின் கலைச்சேவையைப் பாராட்டி 'கலைச்சுடர் மணி விருது' அளிக்கப்பட்டதோடு தற்போது கலைமாமணி விருதும் இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தச் சூழலிலும் இந்தக் கலையை விட்டுவிடாமல் தான் பிடித்துக்கொண்டிருப்பதுபோலவே வறுமையும் தன்னை விடாமல் பிடித்து கொண்டிருப்பதாக வேதனை தெரிவிக்கும் இவர், வருமானத்துக்கு வழியில்லாததால் குடும்பத்தில் தன்னை யாரும் மதிப்பதே இல்லையென்று கண்கலங்குகிறார். நான்கு மகன்கள், ஒரு மகள் பல பேரக்குழந்தைகள் என பெரிய குடும்பம் தனக்கு இருந்தும் குடும்பத்தின் புறக்கணிப்பால் அனாதைபோலவே வாழ்ந்து வருவதாக தழுதழுக்கிறார்.
வருமானத்தை தராத கலையைத் தொடர தனது மகன்கள் விரும்பவில்லையெனக் கூறும் முத்துலட்சுமண ராவ், தனது இறுதி மூச்சு உள்ளவரை இக்கலையை வாழவைக்கப் போராடுவேன் என்று உறுதிபடத் தெரிவிக்கிறார்.
தன் காலத்துக்குப் பிறகு தான் வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சென்னை பாண்டியன் சாலையிலுள்ள அருங்காட்சியகத்திற்கு வழங்கும் முடிவில் இருப்பதாகக் கூறும் இக்கலைஞர், விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் யார் வந்தாலும் அவர்களுக்கு பயிற்சி தரக் காத்திருப்பதாக தெரிவிக்கிறார்.
நலிவுற்ற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பாரம்பரியக் கலைகள் அழிந்துவிடாமல் காத்து-அவற்றை அடுத்த தலைமுறை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பெரும் பொறுப்பை அரசு செவ்வனே செய்ய வேண்டும் என்பதே கலை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.