திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்று முடிந்தது. குடமுழுக்கு விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே பழனி மலை மீது ஏறி சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
இந்த குடமுழுக்கு விழா முடிந்து மாலையில் மலை மீது உள்ள மண்டபத்தில் சண்முகர் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, வண்ண மலர்களால் அரங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் எழுந்தருளியிருந்த சண்முகர் - வள்ளி தெய்வானைக்கு பால், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், தேன், திரவியம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டும், திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வகையான பலன்களைக் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது.
சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு நடந்த அபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் இருந்து சண்முகர் - வள்ளி, தெய்வானைக்கு அர்ச்சகர்கள் திருமணம் நடத்தி வைத்தனர். திருமண வைபோக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: கோடை விடுமுறையில் வெளிநாடுகளுக்கு செல்வோர்க்கு விமான கட்டணங்கள் உயர்வு