திண்டுக்கல்: பண்டிகை காலங்களில் வேட்டி சட்டை என வலம் வந்த நம்மில் பலரும் இன்று ரெடிமேட் ஆடைகள் எனும் ஆயத்த ஆடைகளுக்கு மாறிவிட்டோம். அதனால் இன்று குக்கிராமங்களும்கூட ஆயத்த ஆடைகள் விற்பனை மற்றும் தயாரிப்பு பணியில் இறங்கிவிட்டன.
அந்த வகையில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இன்று குட்டி திருப்பூராகவே மாறிவிட்டது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம். இந்த ஊரில் எங்குச் சென்றாலும் தையல் இயந்திரம் ஓடும் சத்தத்தைக் கேட்க முடிகிறது. இப்படி சின்ன சின்ன தெருக்களில் தயாரிக்கப்படும் ஆண்களுக்கான ரெடிமேட் ஆடைகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர் நத்தம் பகுதி ஆயத்த ஆடை தயாரிப்பு உரிமையாளர்கள்.
மேலும் திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட நத்தம், சிறுகுடி, கோட்டையூர், புதுப்பட்டி, பரளி, வத்திப்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் குடும்பங்களுக்கும் 300 ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கும் இந்த தொழில் வாழ்வாதாரமாக உள்ளது.
இங்கு, 2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயது ஆண்களுக்கும் ஆயத்த சட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி ஆகக்கூடிய காட்டன், பாலிஸ்டர், மோனோ காட்டன், சில்க் காட்டன் மற்றும் தற்போது புது வரவாக வந்துள்ள பாப்கான் சட்டை, டிஜிட்டல் பிரிண்ட் சட்டைகள் உள்ளிட்ட ஆயத்த ஆடைகள் விற்பனையாளர்களிடமும் வாடிக்கையாளர்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த அடைகள் அனைத்தும் ரூ.130 முதல் ரூ.400 வரை விற்பனையாகிறது.
இங்கு உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகள் கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் சென்னை, மதுரை, தேனி, திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சேலம், விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த நிலையில் கரோனா காலகட்டத்திலிருந்து சமீப காலம் வரை நலிவடைந்து வந்த இந்த ஆயத்த ஆடை உற்பத்தி தற்பொழுது தீபாவளி திருநாள் வருகை தர உள்ளதால் திண்டுக்கல் நத்தம் பகுதியில் ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் பணி இரவு, பகலாகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது மட்டும் அல்லாது, அதிக அளவில் ஆர்டர்களும் குவிந்து வருகிறது. இதனால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயத்த ஆடைகள் தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: குன்னூரில் ராணுவ ஆயுத கண்காட்சி… ஆச்சரியத்தில் கண்டு ரசித்த பள்ளி மாணவர்கள்!