திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே வீலி நாயக்கன்பட்டி மலை அடிவாரத்தில், தவயோகி ஸ்ரீ ஞானதேவபாரதி சுவாமிகள் எனும் மடம் இயங்கி வருகிறது. மடத்தின் நிறுவனராக ஞானதேவபாரதி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மடத்தில் புலித்தோல் பதுக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட வனத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் வத்தலகுண்டு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆசிரமத்தை முழுமையாக சோதனையிட்டதில், பீரோவின் மேல் புலித்தோல் பாய்போல் சுற்றி வைக்கப்பட்டிருப்பதை கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த புள்ளிமான் தோல் துண்டுகள், மயில் தோகை, கருங்காலி மரக்கட்டைகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
சுமார் 5 அடி நீளம் கொண்ட புலித்தோல் ஆசிரமத்திற்கு கிடைத்தது எப்படி என விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புலித்தோலின் உண்மை தன்மை குறித்து உரிய பரிசோதனை நடத்தவும் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவான ஆசிரம நிறுவனர் ஞானதேவபாரதியை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை