திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுமக்கள் காத்திருப்பு கூடத்தை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்துவைத்தார்.
அப்போது பேசிய அவர் “திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிற பகுதிகளிலிருந்து வரும் நோயாளிகளுடன் வருபவர்கள் காத்திருப்பதற்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காத்திருப்பு கூடம் கட்டப்பட்டுள்ளது.
இது இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி திண்டுக்கல் கிழக்கு வட்டம் அடியனூத்து கிராமத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது.
அப்பகுதியில் மருத்துவக் கல்லூரிக்கு அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்கிறோம் என தெரிவித்தார்.
இதனிடையே திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வரவுள்ளார்” என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி முதல்வர், இணை இயக்குனர் பூங்கோதை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: விவசாயிகளைப் பாதுகாக்கும் பட்ஜெட்டாக அமைய வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்