திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் விராலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அவரது மனுவில், "ஒட்டன்சத்திரம் விராலிபட்டியில் குடும்பத்துடன் வசித்துவருகிறேன். நான் மாற்றுத்திறனாளி என்பதால் சரியான நேரத்திற்குத் தனியார் மருத்துவமனையில் பணிக்குச் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டுவருகிறேன்.
நான் வசித்துவரும் பகுதி கிராமம் என்பதால் இங்கு வரும் பேருந்துகளும் மிகக் குறைவாக உள்ளது. இதனால் வேலைக்குச் சென்றுவருவதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது.
அது மட்டுமல்லாமல் எனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை. இதுபோன்ற வறுமையான சூழலில் வாழும் தனக்கு அரசு மோட்டார் பொருத்திய இருசக்கர வாகனம் வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மாற்றுத்திறனாளி பாண்டி கூறுகையில், "இருசக்கர வாகனம் வேண்டியும் அரசு வேலை வழங்க வேண்டியும் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்.
ஆனால் இதுவரை எந்த ஒரு பலனும் இல்லை. மாற்றுத்திறனாளியான எங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து செல்லக்கூட எங்களுக்கான நடைபாதை இதுவரை அமைக்கப்படவில்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 135 ஆண்டுகாலம் பழமையான சட்ட பிரிவுகளை ரத்து செய்யக்கோரி வழக்கு!