திண்டுக்கல்: வெள்ளக்கெவி கிராம மக்கள் உதவியுடன் ஆங்கிலேயர்கள் கொடைக்கானல் நகரை உருவாக்கினர். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு விவசாயமே பிரதான தொழில். இக்கிராமம் கொடைக்கானலில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
கொடைக்கானலை உருவாக்க உதவிய இக்கிராம மக்கள் இன்றளவும் சாலை வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் கரடு முரடான பாதை வழியாக சுமார் 8 கிமீவரை நடந்து சென்று வருகின்றனர். தாங்கள் விளைவிக்கும் விளைபொருள்களை தலையில் சுமந்தும், குதிரைகள் மூலமாக ஏற்றியும் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
உடல்நிலை சரியில்லாதவர்களையும், கர்ப்பிணிகளையும் டோலி கட்டி தூக்கி வரும் நிலை பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. இதுபோன்று செல்லும்போது பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. வனப்பகுதியின் வழியே மக்கள் நடந்து செல்லும்போது விலங்குகளின் தொல்லையும் அடிக்கடி ஏற்படுகிறது. பல முறை ஆட்சியாளர்கள் இக்கிராமத்திற்கு வந்து சாலை அமைத்துத் தருவதாக உறுதி அளித்தும், இந்நாள்வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு தங்களுக்குச் சாலை வசதி செய்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசனிடம் கேட்டபொழுது, சாலை அமைக்கும் ஆய்வின் கடைசிக் கட்ட பணி நடைபெற்றுக் கொண்டுள்ளதாகவும், விரைவில் சாலை அமைக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சிறுத்தை நடமாட்டம் தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவு