திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, நாட்டில் மோடி அரசுக்கு எதிராக அலை வீசிக் கொண்டிருக்கிறது. 2 கோடி வேலை வாய்ப்பு தருவோம், விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக்குவோம், ஸ்விஸ் வங்கியில் இருக்கிற கருப்பு பணத்தை எல்லாம் கொண்டு வருவோம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூபாய் 15 லட்சம் போடப்படும் என்று பொய் சொல்லி நம்ப முடியாத விஷயங்களை கூட நம்பும்படியாக பல லட்சம் ரூபாய்களை விளம்பரமாக செலவு செய்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு இன்று முழுக்க முழுக்க மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
குறிப்பாக கொங்கு மண்டலத்தில் தொழில் நகரங்கள் அனைத்துமே மூடப்பட்டு தொழில் இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. தமிழகத்தில் சூப்ரவைசர் வேலைகளுக்குக் கூட 10 இடங்களுக்கு 14 லட்சம் இன்ஜினியரிங், எம்பிஏ பட்டதாரிகள் விண்ணப்பிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பாஜக பினாமி ஆட்சியாக இருக்கும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்தியது. இதுபோன்ற மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் மாநில ஆட்சியையும், மத்திய ஆட்சியையும் தூக்கி எறியும் நேரம் நெருங்கிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கட்சிகள் சரியான பாடம் புகட்டும். இவ்வாறு அவர் கூறினார்.