கரோனா தொற்று காரணமாக கடந்த 60 நாட்களுக்கும் மேலாக பல தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு, தன்னார்வ அமைப்பினர், பொதுமக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். இதனிடையே, திண்டுக்கல் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது சொந்த செலவில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று (மே 30) திண்டுக்கல் மாநகராட்சியின் 13, 14 வார்டுக்கு உட்பட்ட மேட்டுராஜாக்காப்பட்டி, வடுக ராஜக்காபட்டி, கோபால் நகர், ரோமன் ரின்ஸ் ஆகிய பகுதிகளை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் 2200 பேருக்கு கரோனா நிவாரணமாக துவரம் பருப்பு, கோதுமை மாவு, ரவை, சேமியா, 5 கிலோ அரிசி ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார்.
அப்போது, நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக வந்த குடும்ப அட்டைதாரர்கள் தகுந்த இடைவெளி இல்லாமல், முகக் கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக நின்று வாங்கிச் சென்றனர். கரோனா பெருந்தொற்று பரவுவதை தடுக்க பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் தகுந்த இடைவெளியை பின்பற்றி முகக் கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
ஆனால், அரசு அறிவித்த உத்தரவுகளை மாநிலத்தின் அமைச்சராக இருப்பவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கடைபிடிக்காமல் இருப்பது கரோனா தொற்று பரவலை அதிகரிக்கும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.