திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளைக் காணவும், குளு குளு காலநிலையை அனுபவிப்பதற்காகவும் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வருகை புரிகின்றனர்.
கரோனா காலகட்டத்திற்குப் பிறகு படிப்படியாக குறைந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை சமீபமாக உயர்ந்து வருகிறது. இயற்கை காட்சிகளைக் காண குடும்பம் குடும்பமாக வரும் சுற்றுலா பயணிகளின் வருகை ஒரு பக்கம் இருந்தாலும், கொடைக்கானலில் கிடைக்கும் போதைக் காளான்களை ருசிப்பதற்காக ஒரு கூட்டமே வருகிறது என்று கூறினால் நம்ப முடியவில்லை. குறிப்பாக அண்டை மாநிலங்களில் இருந்து வரும் சில இளைஞர்கள், கொடைக்கானல் வருவதே போதைக் காளானுக்காகத் தான் எனக் கூறப்படுகிறது.
இந்த போதைக் காளான்கள் கொடைக்கானல் பகுதியில் இயற்கையாகவே விளையக்கூடிய காளான். காளான் குடும்பத்தில் பலவகை காளான்கள் இருந்தாலும், கொடைக்கானலில் மட்டும் விளையும் இந்த போதைக்காளானுக்கு அதிக மவுசு எனக் கூறப்படுகிறது. இந்த போதைக் காளான்களை சாப்பிடுபவர்கள் சுமார் 8 மணி நேரம் வரை போதையில் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. மரத்தின் அடியிலும், புல் தரைகளிலும் விளையக்கூடிய இந்த காளான்களை தேனுடனும், உணவுப் பொருட்களில் சேர்த்தும் உண்கின்றனர்.
கொடைக்கானலில் மட்டும் விளையக்கூடிய இந்த காளான் கடந்த 10 ஆண்டுகளாகவே அதிக பிரபலமடைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் சுற்றுலா வரும் பயணிகளைக் குறி வைத்து, போதைக் காளான் விற்பனை ஜோராக நடப்பதாகவும், கொரியர் மூலமாக வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இளைஞர்கள் பலரும் இந்த போதைக் காளானுக்கு அடிமையாகி வருகின்றனர்.
போதைக் காளான் விற்கும் கும்பல், ஒரு டசன் போதை காளானை அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்வதாகவும், இந்த காளானின் பின்விளைவுகள் தெரியாமல் பலரும் இதனை உட்கொள்வதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இதனை உட்கொண்டு வந்தால் மற்ற போதைப் பொருளுக்கு அடிமையாவது போல, போதைக் காளானுக்கும் அடிமையாகும் அபாயமும் உள்ளது. தற்போது பலரும் அடிமையாகி இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் விற்பதற்கும், உபயோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த போதைக் காளான் விற்கும் கும்பலை கொடைக்கானல் போலீசார் தொடர்ந்து பிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 4 மாதங்களில் மட்டும், 20க்கும் மேற்பட்ட போதைக் காளான் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சில போதைக் காளான் விற்பனையாளர்கள் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, போதைக் காளான்களை எப்படி சாப்பிட வேண்டும் என வீடியோக்கள் பதிவிடுகின்றனர். அதனைப் பார்த்தும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சிலர் போலியான காளான்களையும், விஷக் காளான்களை ஏமாற்றி விற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கொடைக்கானலில் போதைக் காளான் புழக்கத்தை நிரந்தரமாக தடுப்பதற்கு சமூக வலைத்தளங்களை காவல்துறை மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்கானித்து வருவதாகும் தெரிவிக்கின்றனர். மேலும், தனிக்குழுக்கள் அமைத்து போதைக் காளான் விற்பனையைத் தடுக்க வேண்டும் எனவும், இந்த காளான்களின் பின்விளைவுகள் குறித்து நன்கு ஆராய்ச்சி செய்து, அது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: 'ஆர்எஸ்எஸ் சேவகன் என்பதில் எனக்கு பெருமை' - நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்