தமிழ்நாட்டில் கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத் தளமாக இருந்து வரும்நிலையில், இங்கு ஆண்டுக்கு பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக பல்வேறு சுற்றுலாத் தளங்கள் இங்கு அமைந்துள்ளன.
முக்கிய சுற்றுலாத் தளங்களான மோயர் பாயிண்ட், குணாகுகை, பில்லர்ராக், பைன்மரக்காடுகள், பசுமைப்பள்ளத்தாக்கு, பேரிஜம், பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி என பல்வேறு இடங்கள் அமைந்துள்ளன. மேலும், திடீரென பெய்யும் சாரல் மழையும், அதனுடன் கூடிய குளிரும் சுற்றுலாப் பயணிகளை மெய் சிலிர்க்க வைக்கிறது.
இயற்கையாக அமைந்துள்ள இடங்களும் சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன. இவ்வாறாக வரும் சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பி சுற்றுலாத் தளங்களில் வியாபாரிகள் சிறு கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இவ்வேளையில் உலகையே அச்சுறுத்திய கரோனா என்னும் பெருந்தொற்றால் சிறு தொழில்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.
கரோனா அச்சுறுத்திலின் காரணமாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சுற்றுலாத் தளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கிய அங்கமாக கொடைக்கானல் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஊரடங்கு ஆரம்பித்து ஆறு மாதங்களாக எந்த ஒரு வேலை வாய்ப்பும் இன்றி இங்குள்ள பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சுற்றுலாத் தளங்களில் குழந்தைகளை கவரும் விதமாக விளையாட்டு பொருள்கள் முதல் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு கரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொண்டு வந்தாலும் கொடைக்கானல் மக்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் வழங்கப்படவில்லை. இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இ-பாஸ் பெற்று சுற்றுலாப் பயணிகள் வரலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதேசமயம் இ-பாஸ் வாங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால், உத்தரவை மீறி வந்த சுற்றிலாப் பயணிகள் பலரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தற்போது 5ஆம் கட்ட தளர்வுகளுக்கு பிறகு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க தோட்டக்கலை துறைக்குச் சொந்தமான பூங்காக்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. முக்கிய சுற்றுலாத் தளங்கள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்தி வரும் சிறு வியாபாரிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை இருந்தாலும் முழுமையான தளர்வுகள் இல்லாமல் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக சிறு வியாபாரிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். எனவே இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்து கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டுமென சிறு வியாபாரிகளுடன் சேர்ந்து பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு முடிவில் குளறுபடி: ஓஎம்ஆர் ஷீட் மாற்றப்பட்டதா?