திண்டுக்கல் பொன்னகரம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். இவரது வீட்டிற்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் இன்னோவா காரில் சென்றுள்ளனர். அவர்கள் தங்களை சிபிஐ அலுவலர்கள் எனக் கூறியதோடு வீட்டை சோதனையிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அப்போது காளீஸ்வரன் பீரோ சாவி தன்னிடம் இல்லை என்றும் தன் மனைவியிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து உடனடியாக அந்தக் கும்பல் அருகில் உள்ள அங்கன்வாடியில் வேலை செய்து கொண்டிருந்த காளீஸ்வரனின் மனைவி அருணாதேவியை தாங்களே காரில் சென்று அழைத்து வந்துள்ளனர்.
அதன் பிறகு அருணா தேவியை கட்டாயப்படுத்தி பீரோவை திறக்கச் செய்த அவர்கள் பீரோவிலிருந்த பணம், நகை, சொத்து ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக காளீஸ்வரன் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், ஒரு வருடமாக இந்த புகார் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் தென்மண்டல காவல் துறை தலைவர் முருகன் உத்தரவின் பேரில் திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் முத்துச்சாமி வழிகாட்டுதலில் ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கண்டனர்.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை காவல் துறையினர் தொடங்கினர். மேற்படி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் திருப்பூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற தனிப்படை காவல் துறையினர் கோபி, மாலதி, வினோத், ஐய்யப்பராஜன், முத்துக்குமார், குகன்செட்டி உள்ளிட்ட ஆறு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது திண்டுக்கல் கொள்ளை சம்பவத்தில் தாங்கள் ஈடுபட்டதை ஆறு பேரும் ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து ஆறு பேரையும் காவல் துறையினர் கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து 6 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் தங்க நகைகள், வாகனங்கள், ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர்.
அதேபோல் காளீஸ்வரன் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் 15 பவுன் நகை, ஒரு லட்சம் கொள்ளை என மட்டுமே புகார் அளித்திருந்தார். ஆனால் கொள்ளையர்களிடமிருந்து 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அரசு மதுபான கடையில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் காளீஸ்வரனுக்கு கோடிக்கணக்கில் பணம் எப்படி வந்தது என காவல் துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு ஆகியவற்றிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இந்த கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை பிரிவை சேர்ந்த ஆய்வாளர் உலகநாதன் உள்ளிட்ட காவல் துறையினருக்கு காவல் துறை தலைவர் முருகன் பாராட்டுக்கள் தெரிவித்தார்.