திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 138 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 120 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 17 பேர் தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கரோனா பாதிப்பிலிருந்து விரைவாக மீண்டு வர சித்த மருத்துவம் சார்பில் கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ரஃபீக் அகமது, "கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் ஆங்கில மருத்துவத்தை பின்பற்றினாலும், தினமும் அவர்களுக்கு காலை, மாலை கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கும் கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.
அது அவர்களை கரோனா பாதிப்பிலிருந்து விரைவில் மீள உதவிகரமாக உள்ளது. மேலும் அவர்கள் குணமடைந்து வீடு திரும்புகையில் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் விதமாக அமுக்ரா சூரணம், சவன் பிராஸ் அடங்கிய தொகுப்புகள், முதலமைச்சரின் ஆரோக்கியா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. அதேபோல் கரோனா பாதித்த நபர்களுக்கு மட்டுமின்றி திண்டுக்கல் மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் தினசரி வழங்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சித்த மருத்துவத்துறை சார்பில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி வழங்கிவருகிறோம். அதன்படி இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 16,8132 பேருக்கு கபசுரக் குடிநீர், 13,5145 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு...!