திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் திருமண விழாவிற்கு வருகை தந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”2016 தேர்தலில் போட்டியிட்டோம். 2021இல் மீண்டும் போட்டியிடுவோம். எங்கள் கட்சியின் ஓட்டு வங்கி உயர்ந்து கொண்டே வருகிறது.
தமிழ்நாட்டில் கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும். கல்வி சுகமாக இருப்பதைவிடுத்து சுமையாக மாற்றிவிட்டார்கள். உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை சட்டம் சரியாகத்தான் இருக்கிறது. ஒழுக்கம்தான் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் சீமை கருவேல மரங்களை அடியோடு அகற்ற வேண்டும். இந்த மரங்களில் பறவைகள்கூட கூடு கட்டாது. மரங்கள் நடுவதற்கு பல கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் முறையாக பராமரிக்கப்படவில்லை. தமிழ்நாடு பசுமையாக வரவேண்டும். மழை வளம் பெருகி நீர் மட்டம் உயர்வதற்கு மரங்கள் வளர்க்கப்பட வேண்டும்” என்றார்.