திண்டுக்கல்: தமிழ்நாட்டில் பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்களை ஆசிரியர்கள், வகுப்பறைக்கு வெளியே நிற்க சொல்வதையும், முட்டி போட வைப்பதையும் பார்த்திருப்போம். சில பள்ளிகளில் ஆசியர்கள் மாணவர்களை பிரம்பால் அடித்ததையும் கேள்விப்பட்டிருப்போம். ஏன் நாமும் அனுபவித்திருப்போம். இதற்கெல்லாம் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்பப்படுத்துவது குறைந்து விட்டது.
இருப்பினும், பல பள்ளிகள் இன்னும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல்லில் பள்ளிக்கு தாமதமாக வந்த 10ஆம் வகுப்பு மாணவனை உச்சி வெயிலில் முட்டி போட வைத்த ஆசிரியரின் செயல் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.
இந்தப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நத்தம் அருகே உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 1,600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் நேற்று (மார்ச் 13) காலை 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. இதனால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு மதியம் வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் மதியம் பள்ளிக்கு வருகை தந்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளியை மேம்படுத்த முன்னாள் மாணவர்களை அணுகுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை
இருப்பினும், செந்துறை மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செந்துறை அரசு தொடக்கப் பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்புகல் நடக்கும் என்றும் மாணவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஆசியர்கள் ரகுநாத், முனிசாமி, ராஜேந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த வகுப்பு நேற்று (மார்ச் 13) காலை தொடங்கியது.
இந்த சிறப்பு வகுப்புக்கு 10ஆம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் தாமதமாக வந்தாக கூறப்படுகிறது. இதனால் ரகுநாத் என்ற ஆசிரியர் அந்த மாணவரை அழைத்து திட்டி உள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், செந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் வளாகத்திலேயே மதிய நேரத்தில் உச்சி வெயிலில் முட்டி போட்டுக் கொண்டே படிக்குமாறு வற்புறுத்தியதாகவும் தெரிகிறது.
இதனால் அந்த மாணவன் முட்டு போட்டு படித்துள்ளார். இடையே காலில் சூடுதாங்க முடியாமல் கண்ணீர்விட்டு கதறித் துடித்துள்ளார். இதை கண்ட சிலர் மாணவனை செல்போனில் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படங்களை கண்ட பெற்றோர்களும், பொதுமக்களும் ஆசிரியருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து செந்துறை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் சென்றுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: ஈஸியாக தேர்வு எழுத டிப்ஸ் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்