திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பாரதி நகரில் வசித்து வருபவர் வின்சென்ட் செபாஸ்டின். இவர், வேடசந்தூர் அடுத்த காசிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் புத்தகப் பதிப்பகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி, சோபியா. இவர்களுக்கு இன்பென்ட் என்ற 17 வயதில் மகன் உள்ளார்.
இன்று (ஏப்.28) காலை வின்சென்ட் செபாஸ்டின் வேலைக்குச் சென்ற பிறகு, தாய் சோபியாவிடம், இன்பென்ட் இரும்பு கட்டிலில் படுப்பதற்காக மெத்தை வாங்கித்தருமாறு வற்புறுத்தியதாகத் தெரிகிறது.
இதற்கு அவர் விரைவில் வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். ஆனால், வழக்கம்போல் இன்பென்ட் தாயார் வெளியிலிருந்தபோது வீட்டினுள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். பெற்றோரை மிரட்டுவதற்காக, வழக்கம் போல் செய்கிறார் என நினைத்துக் கொண்டிருந்த அவரது தாயார் சோபியா, கதவை திறக்குமாறு தட்டிய வண்ணம் இருந்துள்ளார்.
கதவு திறக்காமல் இருக்கவே சந்தேகமடைந்த அவர், கணவர் வின்சென்ட் செபாஸ்டின்க்குத் தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு வந்த அவர் வீட்டின் ஜன்னலை உடைத்து பார்த்தபோது, படுக்கை அறையில் மகன் இன்பென்ட் சேலையில் தூக்கிட்டு தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுவனின் பெற்றோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை