திண்டுக்கல்: மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குருநாதநாயக்கனூரில் வசிப்பவர், செல்வ முருகன்.
அதே பகுதியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், அவரது நிலத்தின் அருகே உள்ள அரசு புறம்போக்கு குளத்தில் சிலர் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம், டிராக்டர், டிப்பர்களைப் பயன்படுத்தி மணல் கொள்ளையடித்து வந்துள்ளனர்.
இதனைக் கண்ட சுரேஷ் என்ற விவசாயி, மண் அள்ளுவதை தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்து செல்வ முருகனுக்கு அனுப்பி உள்ளார்.
செல்வமுருகன் உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர், காவல் துறையினர் ஆகியோருக்குத் தகவல் கொடுத்துள்ளார். ஆனால், இதுகுறித்து, எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பின்னர், கிராவல் மண்ணைத் திருடிய மணல் கொள்ளையர்கள் செல்வமுருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பின்னர், செல்போன் மூலம் படமெடுத்த சுரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சுரேஷ் குமார், தனது மகனுடன் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று தங்களது குடும்பத்திற்குப் பாதுகாப்பு வேண்டும் எனப் புகார் மனு அளித்தார்.
இதையும் படிங்க: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது!