திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாஜக மாநிலத் தலைவர் முருகன் வேல் யாத்திரை மேற்கொண்டார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் முருகன் பேசுகையில், கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டம் மற்றும் கயவர் கூட்டத்திற்கு பாடம் கற்பிப்போம். உலகிற்கே வழிகாட்டியாக உள்ள பிரதமர் மோடியின் திட்டத்தை மக்களுக்கு தெரிவிக்கவும், கரோனா காலத்தில் முன்களத்தில் இருந்து பணியாற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கவுமே இந்த யாத்திரையை முன்னெடுக்கிறோம்.
கரோனா காலத்தில் களத்திற்கு வராத திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது ஒரு கனவு கண்டு வருகிறார். அவரது கனவு கனவாகவே போகும். மேலும் கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் இருந்த திமுக அவர்களுக்கு சட்டரீதியான உதவி செய்து வருகிறது. இந்த கருப்பர் கூட்டத்தையும் கயவர் கூட்டத்தையும் காவி கூட்டம்தான் விரட்டும்.
2011ஆம் ஆண்டுக்கு முன்பு மின்சாரம் இல்லாமல் தவிக்க வைத்த திமுகவினர்தான் இன்று விடியலை நோக்கி என்று கிளம்பியுள்ளனர். திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இருட்டே ஏற்படும். உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்து பேசும் கனிமொழி இன்று திமுகவின் முன்னாள் அமைச்சர் தற்போதைய எம்எல்ஏ பூங்கோதை திமுகவினரின் காலில் விழும்போது எங்கு சென்றார்.
அதேபோல் ஆங்கில புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மற்றும் பக்ரித் விழாக்களுக்கு விடுமுறை அளிப்பதுபோல தமிழர்கள் கொண்டாடும் தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளிக்கவேண்டும். பழனியை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும். பழனி வழியாக அதிக ரயில்களை விடவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் வைக்க உள்ளோம் என்றார். இந்த பொதுக்கூட்டம் முடிந்து யாத்திரையை தொடங்கிய முருகன் மற்றும் பாஜக நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்குத் தடை: அவசரச் சட்டம் அரசிதழில் வெளியீடு