சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும்விதமாக 31ஆவது சாலைப் பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டுவருகிறது. இவ்வேளையில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில் மாவட்டங்களில் நடந்தேறிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளைக் காணலாம்.
திண்டுக்கல்
சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கொடைக்கானலில் தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் அன்பழகன் தலைமை வகித்தார். கொடைக்கானல் கலையரங்கம் பகுதி, பேருந்து நிலையம், மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும், அவசர ஊர்தி தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட்டுச் செல்ல வேண்டும், வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்ல வேண்டாம் எனவும் தீயணைப்புத் துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.
விருதுநகர்
சாத்தூர் நகர போக்குவரத்துத் துறை சார்பில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனப் பேரணி சாத்தூர் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆரம்பித்து பிரதான சாலை வழியாக மீண்டும் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வரை நடந்தது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்து பேரணியாகச் சென்றனர்.