தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் குப்புசாமி. இவர் திண்டுக்கல்லில் ஆர்.எம்.காலனியில் உள்ள வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டின் அருகே தனது மனைவியுடன் வசித்துவருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மருத்துவராக உள்ள இவர்கள் வெளியூரில் வேலைப்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 28) குப்புசாமி தனது காரில் வெளியே சென்று வீடு திரும்பினார். வீட்டின் அருகே காரை நிறுத்தும் போது திடீரென கார் வெடித்துள்ளது. இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தபோது, தீப்பிடித்த காரின் முன்னிருக்கையில் அமர்ந்தவாறே எந்தவித சத்தமுமின்றி குப்புசாமி உயரிழந்துள்ளார். இதைப்பார்த்தவர்கள் உடனே தீயனைப்புதுறைக்குத் தகவல் கொடுத்தனர். மேலும் பொதுமக்களும் வீட்டிலிருந்து தண்ணீரை கொண்டுவந்து காரில் ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர்.
மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குப்புசாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.