திண்டுக்கல்: கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் சிகிச்சைக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக மலைக்கிராமங்களை சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமங்களைத் தாண்டி சிகிச்சைக்காக அன்றாடம் வந்து செல்கின்றனர். இதனிடையே அங்கு மேம்பாட்டு பணிகள் நடந்து வரும் நிலையில், சிடி ஸ்கேன் முறையாக செயல்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களின் சிகிச்சைக்கான அல்ட்ரா ஸ்கேன் பரிசோதனைக்காக மலைக்கிராமங்களில் இருந்து வருவோர் தேனி, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய மருந்து மாத்திரைகள் கிடைப்பதில்லை எனவும் சிகிச்சைக்கு வருவோர் வருத்தம் அடைந்துள்ளனர். அத்துடன், அவசர சிகிச்சைக்காக வரும் மக்களை போதிய வசதிகள் இல்லாததால் தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்புவதால் பலரும் சாலை விபத்துகளில் உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.
இது குறித்து பலமுறை சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அல்ட்ரா ஸ்கேன் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: பாலிவுட்டை மிஞ்சும் பயங்கரவாத ஜோடியின் காதல் கதை... கலவரம் முதல் குழந்தை வரை...