திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தலைமை மருத்துவமனையாக அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. கொடைக்கானலைச் சுற்றியுள்ள மக்கள் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையே பயன்படுத்தி வருகிறா்கள். நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இங்கு வந்துசெல்கின்றனர். பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தாலும், அவசர சிகிச்சைக்காக தலைமை மருத்துவமனைக்கே மக்கள் வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக பிரசவத்திற்கு இங்கு வரும் பெண்கள் தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், தீவிர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதலுதவி அளித்து தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மலையில் இருந்து தரைப்பகுதிக்கு 60 கி.மீ தொலைவு என்பதால், சிலர் வழியிலே உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.
மருத்துவமனையில், எக்ஸ்ரே எடுக்கும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் செயல்படாமல் உள்ளதாக குற்றஞ்சாட்டும் பொதுமக்கள், நவீன படுக்கை வசதிகள், போதிய கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மருத்துவமனையைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லாததால், அவ்வப்போது, காட்டுப்பன்றி,காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உலாவருவது தங்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவமனை வளாகம் சுகாதாரமற்ற முறையில் உள்ளதோடு, துர்நாற்றம் வீசி வருவதால் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து கொடைக்கானல் அரசு தலைமை மருத்துவர் (பொறுப்பு) பொன்ரதி அவர்களிடம் கேட்டபோது இந்தப் பிரச்சனைகள் குறித்து தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லாத கோயில் மற்றும் சுற்றுலா நகரங்கள்!