திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி(Palani) தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் தங்கள் வாழ்வில் உள்ள பிரச்னைகள் தீர பாதயாத்திரை, அலகு குத்துவது, காவடி எடுப்பது என முருகனை வேண்டி பல்வேறு விதமான நேர்த்திக்கடனைச் செலுத்துவது வழக்கம். இதில் சேவல், கோழிகளை பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக செலுத்துவதும், கோவில் நிர்வாகமே தினந்தோறும் பக்தர்கள் செலுத்தும் சேவல், கோழிகளை மாலை 7 மணிக்கு மலைக்கோயில் பிரகாரத்தில் வைத்து ஏலம் விடுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மலைக் கோயிலுக்கு சென்று பொதுமக்கள் சேவல், கோழிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் நேற்று மாலை மின் இழுவை ரயில் எதிரே வைத்து சேவல், கோழிகளை ஏலம் விட வைத்திருந்தனர். அப்போது பிராய்லர் கோழி கடையில் 100 முதல் 150 ரூபாய்க்கு கிடைக்கிறது, அதே போல் நாட்டுக் கோழி கிலோ 400 ரூபாய்க்கும், பண்ணைக் கோழி 170 ரூபாய்க்கும், கட்டு சேவல் 450 ரூபாய்க்கும் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: கழிவு மாம்பழங்களைக் கொண்டு 5ஆயிரம் மரக்கன்றுகளை உருவாக்கிய வத்தலக்குண்டு பேரூராட்சி!
ஆனால், கோயில் நிர்வாகத்தில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்படும் சேவல், கோழிகளை குறைந்த விலையில் விற்காமல் அனைத்து விதமான கோழிகளுக்கும் கிலோ ஒன்று 500 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதற்கு மேல், நாங்கள் எப்படி ஏலம் கேட்பது என்றும், இவ்வளவு தொகைக்கு கோயில் நிர்வாகமே விலை வைத்து ஏலம் விட்டால் பொதுமக்கள் நாங்கள் எப்படி ஏலம் எடுப்பது என்று கூறி கோயில் சூப்பிரண்டு குகன் என்பவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சேவல் கோழிகளை குறைந்த பட்சவிலை வைத்து ஏலம் விட்டால் மட்டுமே, அதற்கு மேல் விலை வைத்து ஏலம் எடுக்க முடியும் என கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பழனி கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது நன்கொடையாளர்கள் சார்பில் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், தீர்த்தம், சாமி படம் அடங்கிய மஞ்சப்பை இலவசமாக தரப்பட்டது. ஆனால், தற்போது நன்கொடையாளர்கள் இலவசமாக வழங்கிய பைகளை கோயில் நிர்வாகம் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: பழனி கோயில் நன்கொடையாளர்கள் இலவசமாக கொடுத்த பைகளுக்கு விலை - பக்தர்கள் அதிருப்தி