திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஏராளமான மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாலையோரங்ளில் வசித்து வருகின்றனர். ஆதரவின்றி சாலை ஓரங்களில் தங்கி வரும் இவர்களை பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மனநல மருத்துவத்துறையும் இணைந்து பழனியில் சாலை ஓரம் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சையளிக்க முடிவு செய்தனர்.
இதனையடுத்து பழனி அடிவாரம் மற்றும் நகர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணி நடைபெற்றது. மாவட்ட மாற்றத்தினாளிகள் நல அலுவலர் புவனா, மனநல மருத்துவர் வெஸ்லி தலைமையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து காவல் துறையினரின் உதவியுடன் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், "மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முதல்கட்டமாக கரோனா பரிசோதனை மற்றும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும். பிறகு அவர்கள் திண்டுக்கல், அய்யலூர் மற்றும் ரெட்டியபட்டியில் உள்ள மனநல காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும். மேலும் மனநல பாதிப்பு அதிகளவில் இருக்கும் நோயாளிகளை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்படும். தற்போது முதல்கட்டமாக மனநலம் பாதித்த 10க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளோம். தொடர்ந்து இப்பணி நடைபெறும்" என்று தெரிவித்தனர்.