திண்டுக்கல்: கொடைக்கானலின் அட்டுவம்பட்டி பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர். பாண்டியன் விவசாயிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.
கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்.4) பஞ்சு மீதான ஒரு விழுக்காடு நுழைவு வரி ரத்து செய்யப்பட்டதை விவசாயிகள் சார்பில் வரவேற்கிறோம்.
டிகேடி பட்டா ரத்து கண்டிக்கத்தக்கது
தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை கொண்டுவந்த விவசாய உற்பத்தி ஒப்பந்தச் சாகுபடி திட்ட ரத்தும் வரவேற்கத்தக்கது.
டிகேடி பட்டாக்களை வைத்து பல வருடங்களாக விவசாயம் செய்துவரும் சுமார் 1000 விவசாயிகளின் பட்டாக்களை, எந்தவித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதேபோல் கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதையும் மீண்டும் மறு அளவீடு செய்ய வேண்டும். கொடைக்கானலில் விளைவிக்கப்படும் பிளம்ஸ், வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட காய்கறிகளுக்கு குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்ணாவிரதப் போராட்டம்
மலைப் பகுதியில் மக்கள் குடியிருக்கும் நிலங்களை, லஞ்சம் பெற்றுக் கொண்டு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வருவாய்த்துறையினர் பட்டா மாறுதல் செய்து கொடுக்கின்றனர். வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கு வருவதை தடுக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து அனைத்து கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவர்” என்றார்.
இதையும் படிங்க: மொட்டையடிக்க கட்டணமில்லை, வள்ளலார் சர்வதேச மையம்; அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் 112 புதிய அறிவிப்பு