திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளான வில்பட்டி, அட்டுவம்பட்டி, கோவில்பட்டி, கடற்குடை பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் உருளைக் கிழங்கு சாகுபடி செய்கின்றனர். இங்கு விளையும் உருளைக்கிழங்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா என வெளிமாநில சந்தையிலும் அதிகளவு விற்கப்படுகிறது.
தற்போது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உருளைக்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் கிலோ ஒன்றிற்கு 30 முதல் 35 ரூபாய் வரை விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் குஜராத், ஆக்ரா, ஹாசன், இந்தூர் போன்ற வெளிமாநிலங்களிலிருந்து உருளைக் கிழங்கின் வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது கிலோ ஒன்றிற்கு 18 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை மட்டுமே கொடைக்கானல் உருளைக் கிழங்கு விலை போவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். வரும் நாட்களில், விலை மேலும் சரியும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும், வெளி மாநிலங்களில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கை சந்தை படுத்த ரயிலில் எடுத்துவருவதற்கு அந்த மாநில அரசுகள் சரக்கு கட்டண மானியம் வழங்கி வருவதால் அவர்கள் எளிதில் எடுத்து சந்தைப்படுத்துக்கின்றனர்.
இதுவே கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் உருளைக்கிழங்கின் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.