கரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, உரிய காரணமின்றி மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதனை அலட்சியப்படுத்தும் மக்களில் சிலர் அத்தியாவசிய பொருள்கள் வாங்க வேண்டுமெனக் கூறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிகின்றனர்.
இதனைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அநாவசியமாகப் பயணிப்பவர்களின் வாகனங்கள் மீது மஞ்சள் வண்ண பெயிண்டில் காவல் துறையினர் அடையாளமிட்டனர். தொடர்ந்து வெளியே வந்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.
இது குறித்து கோட்டாட்சியர் சிவக்குமார் பேசியபோது, "அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். இருசக்கர வாகனத்தில் ஒருவரும், நான்கு சக்கர வாகனத்தில் இருவரும் மட்டுமே வருவதற்காக அனுமதி வழங்கப்பட்டது.
விதிகளை மீறி பயணித்தால் வாகனம் பறிமுதல்செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். உரிய காரணங்களின்றி பொழுதுபோக்காக, சுற்றித்திரியும் நபர்கள், காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் மேலும் 5 பேருக்கு கரோனா உறுதி!