கொடைக்கானல் - பழநி சாலையில் உள்ள பிஎல் செட் பகுதிக்கு, தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த திருப்பதி (48) என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார். அப்போது அவருக்கும், இதே பகுதியை சேர்ந்த ஜான்சிராணி என்ற பெண்ணுக்கும் இடையே திருமணத்தைத் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது.
கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ஜான்சிராணியின் தங்கைக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கம் தொடர்பாக, திருப்பதி இருவரையும் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது நண்பர்களான நாகராஜ், சரத்குமார் ஆகியோருடன் இணைந்து, கடந்தாண்டு (2019) ஆகஸ்ட் மாதம் திருப்பதியை கொலை செய்து, கொடைக்கானல் அடுக்கம் வனப்பகுதியில் சங்கு ஓடை அருகே சுமார் ஆயிரம் அடி ஆழமுள்ள குருடி பள்ளத்தில் உடலை வீசி சென்றுவிட்டனர்.
மாயமான திருப்பதி குறித்து அவரது மனைவி முருகேஸ்வரி அளித்த புகாரின்பேரில், மணிகண்டன், நாகராஜ், சரத்குமார், ஜான்சிராணி, சாந்தி ஆகிய 5 பேரையும் கொடைக்கானல் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பதியின் உடலை பள்ளத்தில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்தநிலையில், இவ்வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கில் கைதான 5 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றத்தை நிரூபிக்க ஆதாரம் தேவைப்படுவதால், திருப்பதி கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட குருடி பள்ளம் என்ற இடத்தில், திண்டுக்கல் மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறையின் உதவி இயக்குனர் ஜெயசிம்மராஜா, கொடைக்கானல் காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று(ஜூன்.5) திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து காவல்துறை உயர் அலுவலர்கள் கூறுகையில், "திண்டுக்கல் மாவட்டத்திலேயே, இதுவரையில் கொலை செய்யப்பட்டவரின் உடல், பாகங்கள் கிடைக்காமல் இருப்பதில் இதுவே முதல் வழக்கு. இவ்வழக்கில் உடலை தேடுவதில் பல சவால்கள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில், கொலை செய்யப்பட்டு 9 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், உடல் வீசப்பட்ட பகுதியில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் உடலை தேடுவதில் பல சிரமமங்கள் உள்ளன" என்றனர்.
தற்போது வரை கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட திருப்பதியின் உடல், அது சம்பந்தப்பட்ட பொருள் என, எதுவும் பல நாள்களாக தேடியும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.