திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஜல்லி,எம் சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் லாரிகளில் கொண்டுசெல்லப்படுவது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு நத்தத்தில் அனுமதி இன்றி வெள்ளைக்கல் ஏற்றி வந்த கல்குவாரி வாகனத்தை காவல்துறையிடம் பிடித்து ஒப்படைத்தார், நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் சிவசங்கரன்.
இதுதொடர்பாக ஏற்பட்ட விரோதம் காரணமாக, கல் குவாரி அதிபர் ராஜா, சிவசங்கரனின் வீடு புகுந்து, அவரை மிரட்டித் தாக்கியுள்ளார். இதையடுத்து பாதுகாப்பிற்காக, சிவசங்கரனும் தாக்கியதாகத் தெரிகிறது. இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் ராஜாவைப் பிடித்து நத்தம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பின் ராஜா கைதுசெய்யப்பட்டார். பின், ராஜாவைத் தாக்கியதாக சிவசங்கரன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சிவசங்கரன் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், நத்தம் காவல் துறையினர் விசாரணை செய்து வரும்போதே ராஜாவுக்குச் சொந்தமான ஹிட்டாட்சி வாகனத்தை, சிவசங்கரனின் ஆதரவாளர்களும் நாதக நிர்வாகிகளும் சேர்ந்து தீ வைத்து கொளுத்தியதாகத் தெரிகிறது. இந்நிலையில், ராஜாவின் மனைவி சரசு, காவல் துறையினரிடம் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்தார். பின் புகாரின் பேரில் அங்குராஜ், தினகரன் ஆகிய இருவரையும் கைது செய்த நத்தம் காவல் துறையினர் நான்கு பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் சிவசங்கரன் தாக்கப்பட்டது மற்றும் அதன் எதிர்வினையாக கல்குவாரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹிட்டாச்சி வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் ஆகியவை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தென்காசியில் 12 பவுன் நகை திருடிய நபரை 2 மணி நேரத்தில் பிடித்த போலீசார்