திண்டுக்கல்: குஜிலியம்பாறை தாலுகா கொல்லபட்டி கரிக்காலி அருகேவுள்ள மணப்பாறை கருங்குளத்தைச் சேர்ந்தவர், மாடுபிடி வீரர் மணி(23) என்கிற மணிகண்டன். இவர் நேற்று (பிப்.11) சந்தேகத்திற்கு இடமான முறையில் கொலை செய்யப்பட்டு, பாறை குளத்தில் கைக்கால் கட்டப்பட்டு சடலமாக மிதந்து கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் குஜிலியம்பாறை காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்ததின் பேரில் உடலைக் கைப்பற்றி வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை கருங்குளத்தைச்சேர்ந்தவர், மூக்காயி (32). இவரது கணவர் பாலசுப்பிரமணி (38). இவர்கள், கரூரைச் சேர்ந்த பாலசுப்ரமணி (45) என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் கடனாகப் பணம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மூக்காயிடம் பலமுறை பாலசுப்ரமணி பணம் வேண்டும் என்று கேட்டதற்கு, ஒரு இடம் விற்பனையாக செய்யப் போகிறேன் என்றும்; விற்றுத் தருகிறேன் என்றும் பலமுறை மழுப்பலான பதிலையே கூறிவந்துள்ளார்.
நாளடைவில் மூக்காயிருக்கும் கரூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணிக்கும்(45) திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. அப்போது, மூக்காயின் சொந்த ஊரான கருங்குளத்தைச் சேர்ந்த மணி என்பவருடன், பாலசுப்பிரமணிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் மூக்காயி, தனது கணவர் பாலசுப்பிரமணியனை(38) கொலை செய்துவிட்டால் சொத்துக்கள் அனைத்தும் தனக்கு வந்துவிடும் என்றும்; அந்த பணத்தை வைத்துக்கொண்டு இருவரும் சந்தோஷமாக இருக்கலாம் எனவும் காதலன் பாலசுப்பிரமணியிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, மூக்காய்க்கு தேவையான பணம் மற்றும் செல்போன்களை, மாடுபிடி வீரர் மணி மூலமாக காதலன் பாலசுப்பிரமணி கொடுத்து அனுப்பியுள்ளார். இதற்கிடையே, மூக்காயுக்கும், மாடுபிடி வீரர் மணிக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. பின்னர், மூக்காயிற்காக வாங்கிக்கொடுத்த செல்போனை மணி பயன்படுத்தி வந்தார். அதனை, பார்த்த காதலன் பாலசுப்பிரமணி அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில், மூக்காயின் கணவரை கொலை செய்வதற்காக மாடுபிடி வீரர் மணி, தனது நண்பர்கள் இருக்கிறார்கள் என்று கூறி 50ஆயிரம் ரூபாயை காதலன் பாலசுப்ரமணியத்திடம் வாங்கியுள்ளார். மேலும், மதுரையில் இருக்கும் நண்பர்களை அழைத்து வந்து நீங்கள் சொன்ன காரியத்தை முடித்து விடுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, காதலன் பாலசுப்ரமணி கருங்குளம் அருகே தனது உறவினர் இறந்த நிகழ்விற்கு வந்தபோது அப்பகுதியினர் மூக்காயும், மணியும் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வருகிறார்கள் என்றும்; உன்னை கொலை செய்வதற்கு திட்டம் திட்டி வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.
இதனால் சுதாரித்துக் கொண்ட பாலசுப்பிரமணி, மணியை அழைத்து கரூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துவந்து, மதுவை ஊற்றிக் கொடுத்து பாலசுப்பிரமணியனின் இளைய மகனான பரத்ராஜ் மற்றும் நண்பரான ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து, மணிகண்டனை கொலை செய்து கரிக்காலி அருகே உள்ள குவாரி பாறை குளத்தில் சாக்கு மூட்டையில் கட்டி தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: சித்தேரி அருகே கட்டட தொழிலாளி உருட்டு கட்டையால் அடித்துக் கொலை