திண்டுக்கல்: சென்னமநாயக்கன்பட்டி சக்தி முருகன் நகரில் வசித்து வருபவர் அரசு அலுவலர் பழனி (57). இவர் மருத்துவத் துறையில் விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அருந்ததி (50) ஒட்டன்சத்திரத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ராகுல் (24) என்னும் மகன் உள்ளார்.
இவர்கள் நேற்று (ஜூலை.01) நள்ளிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் பின்புற கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பழனி, அவரது மனைவி ஆகியோரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டிலிருந்த 20 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை
கொள்ளையர்கள் வீட்டிலிருந்து சென்றவுடன் பழனியும் அவரது மனைவியும் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த தனது மகனிடம் நடந்த சம்பவத்தைக் கூறினர். இதையடுத்து, உடனடியாக இது குறித்து தாடிக்கொம்பு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும், கொள்ளையர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ. 3 லட்சம் கொள்ளை