திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ரெட்டியபட்டியில் இயங்கிவந்த தனியார் நிறுவனத்தில் ஒடிசாவைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவந்தனர்.
கரோனா வைரஸ் (தீநுண்மி) பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்கள் வேலையின்றி சிரமப்பட்டுவந்தனர்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவிவரும் நிலையில் தங்களை ஒடிசாவிற்கு அனுப்பிவைக்குமாறு தொழிலாளர்கள் காவல் துறையினரிடம் கோரிக்கைவைத்தனர்.
இதையடுத்து முதற்கட்டமாக 40 பேரை வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டியன் முயற்சியில் அரசின் உரிய அனுமதி பெற்று அவர்களைச் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, அவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இரண்டு வாகனங்களில் இருக்கைக்கு ஒருவர் என்ற அடிப்படையில் முகக்கவசம் அணிந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும், தங்களது கோரிக்கையை ஏற்று சொந்த ஊர் திரும்ப ஏற்பாடுசெய்த வத்தலகுண்டு காவல் துறையினருக்குத் தொழிலாளர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.