திண்டுக்கல்: வடமதுரை ரங்க நாயகி அம்மாள் கோவில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளை வைத்து புகழ்பெற்ற ஸ்தபதி மூலமாக பெருமாள் சிலை, ஸ்ரீதேவி சிலை, பூதேவி சிலை, சந்திர்சேகரன் சிலை, பார்வதி சிலை என ஐந்து சிலைகள் செய்யப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் செயலாளர் சண்முக சுந்தரம், பூசாரி பாண்டியன், குமார் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி அறையில் அடைத்து வைத்து நிறுவப்பட்ட ஐந்து சிலையை திருடி சென்றனர். ஆனால் திருட்டு தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை எந்த வித புகாரும் அளிக்கவில்லை.
இந்நிலையில் திருடப்பட்ட 5 சிலைகளை புரோக்கர்களான திண்டுக்கலை சேர்ந்த பால்ராஜ், தினேஷ், இளவரசன் ஆகியோர் 12 கோடி ரூபாய்க்கு சிலைகளை விற்க முயலுவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலை வாங்குபவர் போல மாறுவேடத்தில் நடித்து 3 புரோக்கர்களான இளவரசன், பால்ராஜ், தினேஷ், குமார் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 சிலைகளை மீட்கப்பட்டனர்.
பிடிபட்ட புரோக்கர்கள் அளித்த தகவலின் பேரில் ஐந்து சிலைகளையும் வைத்திருந்த முக்கிய நபரான பிரபாகர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கடந்த மே மாதம் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சிலை திருட்டில் நேரடியாக ஈடுபட்டது பிரபாகர், குமார் மற்றும் ஈஸ்வரன் என விசாரணையில் தெரியவந்தது.
முக்கிய நபரான பிரபாகரிடம் ஐந்து சிலைகள் இருப்பதை தெரிந்து கொண்ட புரோக்கர்கள் அவரிடம் வாங்கி விற்பனை செய்ய முயற்சி செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையுத்து நேரடியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பிரபாகரின் கூட்டாளிகள் குமார் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துணை நடிகை மாயம்