நாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இதில், மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டது முதலே தமிழ்நாடு முழுவதுமுள்ள மதுப் பிரியர்கள் பலரும், பெரும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். மேலும் மாற்று போதை வஸ்துக்களின் உபயோகம் தமிழ்நாட்டில் அதிரித்து வந்தது. இதில், குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு இடங்களில் கள்ளச்சாராயம் விற்ற நபர்களை மதுவிலக்கு அலுவலர்கள் கைது செய்து சாராய ஊறல்களை அழித்துள்ளனர்.
இந்நிலையில், பழனி, மயிலாடும்பாறை என்ற இடத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து ஆய்வாளர் வெங்கடாச்சலம் தலைமையில் மாறுவேடத்தில் சென்று சோதனை மேற்கொண்டபோது, கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்த மூன்று நபர்கள் பிடிபட்டனர்.
பிடிபட்ட நபர்கள் வைத்திருந்த 10 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பழனியைச் சேர்ந்த மணிகண்டன், செந்தில் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்து மதுவிலக்கு காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கதிர் அரிவாள் தயாரிப்பு தொழிலாளர்கள்