திண்டுக்கல் - பழனி புறவழிச்சாலையில் மார்டன் அப்போலோ மருந்து கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு இன்று (டிச.29) 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் வந்தனர். அவர்கள் கடை ஊழியர் ராஜ்குமாரிடம் தூக்க மாத்திரை ஒரு அட்டை வேண்டும் எனக் கேட்டனர்.
தூக்க மாத்திரை தரமறுத்த ஊழியருக்கு அரிவாள் வெட்டு:
அதற்கு கடை ஊழியர் ராஜ்குமார், மருத்துவர் அளித்த மருந்து சீட்டு வேண்டும் எனக் கேட்டார். மேலும், மருந்து சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை தரமுடியாது எனவும் கூறினார். இதனால் கடை ஊழியருக்கும், மாத்திரை வாங்க வந்த சிறுவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, திடீரென ஒருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கடை ஊழியர் ராஜ்குமாரின் இடதுகையை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
காவல் துறை விசாரணை:
இந்நிலையில், ராஜ்குமாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வெட்டுக்காயம் பலமாக இருக்கவே மேல் சிகிச்சைக்காக மதுரை ராசாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே, பட்டப்பகலில் தூக்க மாத்திரை கேட்டு தரமறுத்த மருந்துக்கடை ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சாலையில் சென்ற பெண்ணிற்கு அரிவாள் வெட்டு: சட்டக் கல்லூரி மாணவருக்கு போலீஸ் வலை!