திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகநாத பண்டியன். இவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "மஞ்சளாறு அணை 1968இல் தேனி, திண்டுக்கல் மாவட்ட விவசாய பாசனத்திற்காக கட்டப்பட்டது.
மஞ்சளாறுக் கொடைக்கானல் மலையில் உற்பத்தியாகிறது. அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 5,259 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது. மஞ்சளாறு அணை முதல் ஆலங்குளம் வரை 9 அணைக்கட்டுகள், 7 குளங்கள் உள்ளன.
பொதுப்பணித்துறையினர் பல்வேறு தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக அரசாணை பிறப்பித்தனர். அதில், மஞ்சளாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளை கட்ட அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2018 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் தடுப்பணை கட்டுவதற்கு தற்போதைய நிலை தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மஞ்சளாறு குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதால் பழைய ஆயக்கட்டு தாரர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.
ஆகவே, மஞ்சள் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு, இது குறித்து பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, மேலும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அத்தோடு சேர்ந்து பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர்!