திண்டுக்கல்: வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபு மீது 2018ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்த நிலையில், வழக்கை அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு, வழக்கில் இருந்து விடுவிக்க, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூபாய் 3 கோடி லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து, மருத்துவர் சுரேஷ்பாபு கடந்த நவம்பர் 30ஆம் தேதி அன்று திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகளை மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் கொடுத்து அமலாக்கத்துறை அதிகாரியிடம் கொடுக்க கூறியுள்ளனர். அதன்படி, பணத்தைக் கொடுத்த போது வருமானவரித்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாகக் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் மதுரை அமலாக்கத்துறை அலுவலகம், அங்கித் திவாரியின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சில முக்கிய ஆவணங்களைக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த விவகாரம், தொடர்பாக மதுரை மாவட்டம் அமலாக்கத்துறை சார்பில் தமிழ்நாடு டி.ஜி.பி சங்கர் ஜிவால் இடம் புகார் அளித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக மதுரை மாவட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை மாவட்டம் தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனை அடுத்து, திவாரி மீது அமலாக்கத்துறை சார்பில் தனியாக வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக, மதுரை மத்தியச் சிறையில் உள்ள அங்கித் திவாரியிடம் துறை ரீதியாக விசாரணை நடத்த வேண்டும் என திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த ஜன.5 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையின் போது தங்கள் தரப்பினரும் உடன் இருக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதி 3 முறை ஒத்திவைத்ததை அடுத்து, இந்த மனு இன்று (ஜன.12) நீதிபதி மோகனா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: தலைமை வனக்காப்பாளர் ஓய்வூதிய பலன் வழங்கக் கோரிய வழக்கு: ரூ.10,000 அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் அதிரடி!