திண்டுக்கல்: திண்ணப்பன் என்பவர், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது சொந்த வீட்டில் மனைவி, மகன் அருண், மருமகள் லட்சுமி மற்றும் இரண்டு பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். திண்ணப்பன், கடந்த 40 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார்.
கடந்த 12 ஆண்டுகளாகக் காரைக்குடியைச் சேர்ந்த ராஜ கருப்பையா என்பவரிடம் ரியல் எஸ்டேட் தொழிலுக்காகப் பணம் கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 7 கோடி ரூபாய் கடனாகப் பெற்றிருந்த நிலையில், வாங்கிய பணத்திற்கு வட்டியும் இரண்டு கோடி ரூபாய் அசலும் முதல் தடவையாக கொடுத்துள்ளனர்.
அதன் பின்னர், இரண்டு கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். மீதம் உள்ள கடன் தொகைக்கு அடமானமாக 2 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தின் பத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அசல் பணம் 2 கோடி ரூபாய் ரொக்கமாகவும் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார், திண்ணப்பன்.
இந்த நிலையில், மீதமுள்ள கடன் தொகைக்கு மீண்டும் நான்கு கோடி ரூபாய் வட்டியும் முதலும் தர வேண்டும் என்று ரவி மற்றும் சரவணன் என்ற அடியாட்களுடன் கடன் கொடுத்த ராஜ கருப்பையா, திண்ணப்பனின் வீட்டிற்குக் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி சென்றுள்ளார்.
அங்கு திண்ணப்பன் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், 3 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் வீட்டினுள் கட்டில், பீரோ, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களுடன் ராஜ கருப்பையா வீட்டினுள் குடியேறி "நான் கொடுத்த பணத்தை வட்டியும் முதலுமாகத் தர வேண்டும், இல்லை என்றால் வீட்டை விட்டு காலி செய்ய முடியாது" என்று கூறி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து திண்ணப்பன் மற்றும் அவரது மகன் அருண் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி, பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று ராஜ கருப்பையா விடம் கூறிவிட்டு, தனது உறவினர்கள் மூலம் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனின் முகாம் அலுவலகத்திற்குச் சென்று புகார் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக காவல் துறையினர் வீட்டில் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களை மீட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, ராஜ கருப்பையா உள்பட ரவி, சரவணன் ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பங்காரு அடிகளார் செய்த புரட்சிகள் என்னென்ன?