கரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அரசு சார்பில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், அதிலுள்ள இடர்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது.
இதில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கரோனா வைரஸ் தொற்று பரவுவதை முற்றிலும் தடுக்கும் விதமாக தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 170 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் ஊராட்சி பகுதிகளில் கூடுதலாக தூய்மை காவலர்களை நியமித்து தொடர்ந்து கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் செயல்படுத்தப்படும். அதேபோல திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவற்றவர்களை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து தினந்தோறும் அவர்களுக்கு உணவு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒருபுறம் துரிதமாக நடைபெற்றாலும், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக அதிக அளவில் வெளியே வருகின்றனர். கண்டிப்பாக மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக காந்தி மார்கெட் பகுதியில் அதிகளவில் மக்கள் கூடுகின்றனர். மக்கள் மார்கெட்டுகளில் கூடுவதை தவிர்க்க வேண்டி நகரின் பல்வேறு இடங்களில் காய்கறி சந்தைகள் அமைக்கப்படும். எனவே பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமா என்று அச்சப்படத் தேவையில்லை. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் பொதுமக்கள் ஒரு நாளைக்கு 23 மணி நேரத்திற்கு மேலாக வீட்டிலிருந்திட வேண்டும். ஏனெனில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால்தான் தொற்று பரவாமல் முழுமையாக தடுக்க முடியும் என்று கூறினார்.