திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அமைந்துள்ள மாட்டுபட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 10 தினங்களாக இங்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதைக் கண்டித்து இன்று அக்கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்தப் பகுதிக்கு வந்த அரசு பேருந்தையும் கிராம மக்கள் சிறைபிடித்தனர். பேருந்தின் முன்பு காலி குடங்களுடன் பள்ளங்கி பிரதான சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடைக்கானல் காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பிறகு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:நான்காவது நாளாக தொடரும் சிறப்பாசிரியர்களின் காத்திருப்பு போராட்டம்