திண்டுக்கல்: போகர் ஜெயந்தியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் உள்ள போகர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடந்தது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆண்டுதோறும் போகர் ஜெயந்தி விழாவை, புலிப்பாணி வாரிசுகள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். ஆனால் தற்போதுள்ள கோயில் நிர்வாக அதிகாரி, அதை நடத்த கூடாது என உத்தரவிட்டார். ஆனாலும் கோர்ட்டில் விழா நடத்த அனுமதி வாங்கியும் கூட பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
பழனி முருகன் கோயிலில் நடந்த கும்பாபிஷேகம் கூட ஆகம விதிப்படி நடக்கவில்லை என சொல்கிறார்கள். அதன் விளைவுதான் அரசுக்கு கேடு விளைவித்து கொண்டு இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக தான் விஷச்சாராயம் குடித்து பலர் இறந்துள்ளனர். இதில் அரசும், காவல் துறை அதிகாரிகளும் போதிய கண்காணிப்பு இல்லை. ஆனால் அதிகாரிகளை மட்டும் இடமாற்றம் செய்கிறார்கள். அது சரியான நடைமுறை இல்லை. அரசு சரியாக செயல்பட்டால் தான் அதிகாரிகளும் நேர்மையாக இருப்பார்கள்.
வேறு ஏதாவது சம்பவத்தில் இறந்தால் ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் நிவாரணம் என்கிறார்கள். விஷ சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் தருகிறார்கள். இது விஷ சாராயம் அருந்தியவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. இதை இந்து முன்னணி கடுமையாக கண்டிக்கிறது.
சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு ரூ.30 லட்சத்தில் நீச்சல் குளம் கட்டி இருக்கிறார்கள். இதற்கான கட்டிட செலவு எவ்வளவு ஆகும் என அதிகாரி ஒருவரிடம் கேட்டால் ரூ.10 லட்சம் என்கிறார். பழனி முருகன் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதற்கு பல்வேறு பக்தர்கள் லட்சக்கணக்கில் நன்கொடையாக நிதியும், பொருட்களும் அளித்து இருக்கிறார்கள். ஆனால் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள். எனவே கோயில் நிர்வாகம் கும்பாபிஷேகம் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மணல் கொள்ளையை தடுத்த வி.ஏ.ஓ.வை கொலை செய்திருக்கிறார்கள். அதேபோல் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் ஒருவர் தாசில்தாரை வெட்டுவேன், குத்துவேன் என மிரட்டல் விடுக்கிறார். இது பற்றி அந்த கட்சியும், அரசும் எவ்வித அறிக்கையும் கூறவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டு கொள்கிறது"
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை - கிராமமே திரண்டு வந்து காப்பாற்றி உதவி!