ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் ஒன்றிணைந்து, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வாட்ஸ்அப் குழு ஒன்றை அமைத்துள்ளனர்.
அதில் 200க்கும் மேற்பட்ட மாணவிகளும், தற்போது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் உள்பட ஏழு பேர் அட்மின்களாக உள்ளனர். மேலும் குழுவில் தற்போது பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவிகளும் அடங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ஒரு மணியளவில் ஆபாசப் படங்கள் குழுவில் பகிரப்பட்டுள்ளது.
இதனைக் கண்ட மாணவிகளின் பெற்றோர், கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக ஆபாசப் படங்கள் அனுப்பிய நபரின், அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால், அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டதற்கு, வாட்ஸ் அப் குழு பள்ளிக் கல்வி தொடர்பான குழு அல்ல, பள்ளிக்கும், வாட்ஸ்அப் குழுவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கு மாவட்ட சைபர் கிரைம் காவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : கள்ளச்சந்தையில் கறுப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்தினை விற்ற நால்வர் கைது!