திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மிடாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அரவிந்த்(26) டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில், அரவிந்திடம் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருச்சியைச் சேர்ந்த ஜான் என்ற ஏஜென்ட் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி துபாய் நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அரவிந்த் சார்ஜாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு அவரை சம்பளம், உணவு வழங்காமல் கொத்தடிமை போல நடத்தியுள்ளனர். இவை அனைத்தையும் அரவிந்த் தொலைபேசி மூலம் தனது பெற்றோரிடம் கூறி மீட்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து அரவிந்தின் தந்தை நாகராஜ், அவரது தாய் இருவரும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு அளித்தனர். ஏற்கனவே மகனை மீட்டுத் தரக்கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்திருப்பதாகக் கூறிய அவர்கள், உடனடியாக ஆட்சியர் தங்களது மகனை மீட்டுத் தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பேசிய அரவிந்தின் தந்தை, ”தெரிந்த நபர் கூறியதால் நம்பி எனது மகனை துபாய்க்கு அனுப்பி வைத்தேன். கடந்த 14 மாதங்களில் அரவிந்துக்கு உரிய சம்பளம் வழங்காமல் தொடர்ந்து வேலை வாங்குவதோடு கொத்தடிமை போல நடத்தி வருகின்றனர். அவனை அழைத்துச் செல்லும்போது சிவில் துறை சம்பந்தமான பணி என்று கூறிதான் அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவனுக்கு கம்பி கட்டும் கடினமான வேலை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல மணி நேரம் உணவின்றி வேலை வாங்குகிறார்கள். அவனது கைப்பேசியை எடுத்து நிறுவனத்தினர் ஒளித்து வைத்துவிட்டதால் உடனிருக்கும் நண்பரின் தொலைபேசி மூலம் எங்களை அழைத்து மேற்கூறிய விவரங்களைக் கூறி விரைவில் மீட்கும்படி எனது மகன் அழுதான்” என்று கூறினார்.
இதையும் படிங்க: துபாயிலிருந்து கைப்பையில் கடத்திவரப்பட்ட 5 மாதக் குழந்தை!