திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள்கள் நடைபெறும். மலையடிவாரத்திலுள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் தங்க கொடிமரத்தில் தைப்பூச திருவிழா கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக கொடிமரத்திற்கு திருமுழுக்குகளும், வழிபாடுகளும் நடைபெற்றன.
தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 7ஆம் தேதியும், தைப்பூசத் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி 8ஆம் தேதி மாலையும் நடைபெற உள்ளது.
தைப்பூச திருவிழாவில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாகப் பழனிக்கு வரத் தொடங்கியுள்ளனர். மலையடிவாரத்தில் பக்தர்கள் காவடிகளை சுமந்தபடியும், அலகு குத்தியும் மேளதாளத்துடன் கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்திவருகின்றனர்.
தைப்பூச திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, உதவி ஆணையர் செந்தில்குமார், காவல் துறை துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முத்துக்குமாரசாமியை தரிசனம்செய்தனர்.
இதையும் படிங்க: தைப்பூசத்திற்காக கோவை - பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கம்