திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த திருவிழாவாக கொண்டாடப்படுவது, நவராத்திரி திருவிழா. இந்த திருவிழா வருகிற 15ஆம் தேதி காப்புக் கட்டும் விழாவுடன் துவங்கி 24ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்த நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சாமியை பல்லக்கில் அமர வைத்து, பழனி அருகே உள்ள கோதை ஈஸ்வரர் கோயிலில் வில் அம்பு போடும் மகிசாசூரவதம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இதனையொட்டி ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சாமிகள் நேற்று (அக்.12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "பாரம்பரியமாக ஆண்டுதோறும் பழனியில் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது.
மேலும், இது ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் புலிப்பாணி ஆசிரமம் சார்பிலும், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம் சார்பிலும் நடைபெற்று வந்தது. ஆனால் கோயில் நிர்வாகம் இது கோயிலில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும், புலிப்பாணி ஆசிரமத்திற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதனை அடுத்து, இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகத்திற்கும், அறநிலையத்துறைக்கும் சாதகமாகத் தீர்ப்பு வந்தது. இதன் தொடர்ச்சியாக அந்த தீர்ப்பை எதிர்த்து, ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் புலிப்பாணி ஆசிரமம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பராம்பரியம் மாறாமல் கோயில் நிர்வாகமும், ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் புலிப்பாணி ஆசிரமமும் இணைந்து நவராத்திரி திருவிழாவை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் நவராத்திரி திருவிழா வருகிற 15ஆம் தேதி துவங்கி 24ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு நடைபெறுகிறது.
ஆகவே, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம், ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் புலிப்பாணி ஆசிரமத்துடன் இணைந்து நவராத்திரி திருவிழா சிறக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என கூறினார்.
இதையும் படிங்க: தசரா திருவிழாவுக்கு தயாராகும் குலசை.. மாறுவேடத்துக்கான ஆடை அணிகலன் தயாரிக்கும் பணி தீவிரம்!