திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் விசேஷ நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர். சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்து முடி காணிக்கைச் செலுத்திய பிறகு சாமி தரிசனம் செய்வார்கள். அப்படி சாமி தரிசனம் செய்யும் இடங்களில் கோயில் நிர்வாகம் சார்பில் 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் மொட்டையடிக்க கட்டணம் இல்லை என கடந்த இரண்டு நாள்களுக்கு முன் சட்டப்பேரவையில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
திருப்பதி போன்று மொட்டையடிக்க கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று நீண்ட நாள்களாக பக்தர்களும் பல அமைப்புகளும் கோரிக்கை வைத்துவந்தனர். அதனை நிறைவேற்றும்விதமாக அமைச்சரின் அறிவிப்பும் அமைந்தது.
அதன்படி, இன்று முதல் மொட்டை அடிக்க கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
ஆனால், தனியார் மொட்டை அடிக்கும் இடங்களில் பக்தர்களிடம் 100 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.