சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல்செய்திருந்தார். அதில் தெரிவித்துள்ளதாவது:
பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் வந்துசெல்கின்றனர். பழனி நகராட்சியில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை ஒரு லட்சமாக இருந்தது.
தற்சமயம் மக்கள்தொகை அதிகரித்த நிலையிலும், பொதுமக்கள், பக்தர்களின் வசதிக்காக எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யாததால், பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பலர் பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், பேருந்து நிலையம், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து இருப்பதால் பக்தர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
பக்தர்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த 2013ஆம் ஆண்டு மனு அனுப்பினேன். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட அலுவலர்கள் அனைவருக்கும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு ஆக்கிரமிப்பு, சுற்றுப்புற சுகாதாரம், சாலைப் பாதுகாப்பு, நீர்வள மேலாண்மை, அடிப்படை வசதிகள் செய்து பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவிட வேண்டும் என ஏற்கனவே வழக்குத் தொடர்ந்திருந்தால் இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மனுதாரர் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், பொதுப்பணித் துறை அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (மார்ச் 24) நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் முன்னிலையாகி நீதிமன்ற உத்தரவை இதுவரை முறையாகப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலர் உள்பட மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆகியோர் வழக்கின் தற்போதைய நிலை அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.