மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் பழனி வனப்பகுதியில் அதிகளவில் வனவிலங்குகள் வாழ்கின்றன. சாகுபடி நிலத்துக்கு காட்டுப்பன்றிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இவை மலையடிவார கிராமங்களான கோம்பைபட்டி, சட்டப்பாறை, பாலாறு, பொருந்தல், புளியம்பட்டி, காவலப்பட்டி, சண்முகம்பாறை பகுதிகளில் விளைநிலத்திற்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துகின்றன.
இதனால் விவசாயிகள் இரவில் தூக்கத்தை இழந்து காட்டுப்பன்றிகளை விரட்ட சிரமப்படுகின்றனர். சில நாள்களுக்கு முன் ஆரோக்கிய ராஜ் (72) என்பவர் தனியார் நிலத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது காட்டுப்பன்றி தாக்கி உயிரிழந்தார்.
விளைநிலத்தைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்ட வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.