திண்டுக்கல்: அதிமுக சார்பில் உள்ளாட்சித்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டம் நேற்று (பிப்.10) திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது வேட்பாளர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "அதிமுகவைப் பொறுத்தவரை திண்டுக்கல் மாவட்டம் ஒரு முக்கியப்பங்கு வகித்துள்ளது. அதிமுகவிற்கு அச்சாரமாக விளங்கியது திண்டுக்கல். அதிமுக ஆட்சி மக்களாட்சியாகும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக அரசு நூறு விழுக்காடு நிறைவேற்றியது.
மக்கள் குறித்து கவலை இல்லா திமுக
தாலிக்குத் தங்கம் திட்டத்தை 4 கிராமில் இருந்து 8 கிராமாக உயர்த்தியது ஜெயலலிதா தான். திருமண உதவித்தொகையை ரூ. 12 ஆயிரத்தில் இருந்து, ரூ. 18 ஆயிரமாக உயர்த்தியது எடப்பாடி பழனிசாமிஅரசு.
அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தரமாக கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தரமாக வழங்கப்படவில்லை.
திமுக பொங்கல் பரிசாக வழங்கிய அரிசியை மாடு கூட சாப்பிட மறுக்கிறது. திமுகவுக்கு மக்களைப்பற்றி கவலை இல்லை. நீட் தேர்வில் தமிழ்நாடு முதலமைச்சரின் மாயாஜாலம் பலிக்கவில்லை. உள்ளாட்சித்தேர்தலில் திமுகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்ட உள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அனைத்திலும் அதிமுகதான் வெற்றி பெறும்.
திமுக ஆட்சியில் உருப்படியான திட்டம் இல்லை. இன்னும் கொஞ்சம் நாளில் எந்த அமைச்சர்களும் வீதிக்கு வர முடியாது. இழந்த ஆட்சியை மீண்டும் பெற இப்போது நல்ல காலம் வந்துள்ளது.
தந்தை பெரியார் கண்ட கனவை நனவாக்கியவர் முதலமைச்சர் ஜெயலலிதா மட்டும்தான். நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக நூற்றுக்கு நூறு வெற்றி பெறும்" என்றார்.
இதையும் படிங்க: 'தலைக்கு தில்ல பார்த்தீயா..!' - பாஜக தலைமை அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு